தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அக்டோபர் 9ஆம் தேதி டாக்டர் திரைப்படம் வெளியாகி இன்று வரை வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்திற்கு சிவகார்த்திகேயன் அவர்கள் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “நான் காக்கிசட்டை குடும்பத்தில் இருந்து தான் வந்தேன். எனது அப்பா சிறைத் துறை கண்காணிப்பாளராக பணியாற்றியவர். எனவே காவல்துறை மீது எனக்கு தனி ஈர்ப்பு எப்போதும் இருக்கும்.
காவல்துறை ஆரம்பித்தது முதல் அதன் பரிமாணம் பற்றி முழு விபரத்தையும் இந்த அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். அதோடு அதனை அவர்கள் விளக்கிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. பலருக்கு தெரிந்த விஷயமாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு கதை இருப்பது பிரமிப்பாக இருக்கிறது. காவல் அதிகாரியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் காவல்துறையினரால் கவரப்பட்டவர்கள் அனைவருக்கும் இந்த அருங்காட்சியகம் ஒரு சிறந்த இடமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.