கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களை புரட்டிப்போட்ட கன மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் கோட்டையும், மல்லபுரம், இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள், வீடு என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் மாயமாகி உள்ளனர். கேரளாவில் தொடர்ந்து விடாமல் பெய்து வரும் மழையால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முழுவீச்சில் வேலை செய்து வருகின்றனர். மேலும் நிவாரண பணிகள் தொடர்பாக முதல்வர் பினராய் விஜயன் அவசர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கேரள மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், மக்களின் உயிர்களை காக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் பத்தனம்திட்டாவிலும் கனமழை பெய்து வருவதால் பக்தர்கள் இரண்டு நாட்களுக்கு சபரிமலைக்கு வரவேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.