உணவு, தண்ணீர், டீசல் இன்றி 13 நாட்களாகத் தவித்து வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குஜராத்தில் சிக்கியுள்ள 600 தமிழ்நாடு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று மகா புயலாக மாறியது. இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புயலில் சிக்காமல் இருக்க கடற்கரை பகுதியில் ஒதுங்க கடற்படை அறிவுறுத்தியது. அதன்பேரில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பல்வேறு பகுதிகளில் கரை ஒதுங்கினர்.இதில் ஒருசில மீனவர்கள் குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் பகுதியில் கரைஒதுங்கினர். இந்நிலையில் கரை ஒதுங்கிய மீனவர்களில் உண்ண உணவு, தண்ணீர், டீசல் இன்றி தவித்து வருவதாகவும், தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கூறுகையில், ‘கடற்படை கோரிக்கை ஏற்றும் உயிருக்கு பயந்தும், குஜராத் பகுதியில் கரை ஒதுங்கினோம். 13 நாட்களாக இந்தப் பகுதியில் தவித்து வருகிறோம். ஆனால் இதுவரை மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது உண்ண உணவு, தண்ணீரின்றியும், சொந்த ஊருக்கு திரும்ப டீசல் இன்றியும் 40 படகுகளில் 600 மீனவர்கள் தவித்து வருகிறோம். எங்கள் நிலையை உணர்ந்து மத்திய, மாநில அரசுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.