அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதி அருகே எட்டு பிள்ளைகள் பெற்ற மூதாட்டி ஒருவர் பஸ்நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மனைவி சுலோச்சனா. 90 வயதாகும் இவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கஜேந்திரன், ரங்கராஜன், மனோகரன் ஆகிய 3 மகன்கள் திருப்பூரிலும் இளங்கோவன், வீரராகவன் ஆகிய இரண்டு மகன்கள் கவுரபாளையத்திலும் கூலி வேலை செய்து வருகின்றனர். அவரது மூன்று மகள்கள் திருமணமாகி கவுரபாளையத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். ஜெகநாதன் 40 ஆண்டுகளுக்கு முன்பு மரணமுற்ற நிலையில், சுலோச்சனா சில மாதங்களுக்கு முன்பு வரை திருப்பூரில் உள்ள மகன்களுடன் வசித்து வந்தார். இதையடுத்து தனது சொந்த ஊரான கவுரவப்பாளையத்திற்கு திருப்பூரில் இருந்து வந்த சுலோச்சனா மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பைக் கொண்டு மோதியதால் அவர் படுகாயம் அடைந்தார்.
பின் சாலையோரம் சென்று கொண்டிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு ஆண்டி மடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரது மகன் இளங்கோவன் என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர் தாயை மருத்துவமனையில் இருந்து கூட்டி வந்து பஸ் நிலையத்தில் அமர வைத்து அவரது மனைவிக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார். பின் பேருந்து நிலையத்திலேயே காயங்களுடன் முடியாமல் படுத்துவிட்டார் மூதாட்டி.
இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் சிலர் அரியலூர் மாவட்ட தலைமை காவலரிடம் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதையடுத்து ஆண்டிமடம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மூதாட்டி ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின் ஜெயங்கொண்டம் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மூதாட்டிக்கு தேவையான வசதிகள் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. எட்டு பிள்ளைகள் இருந்தும் அனாதையாக மூதாட்டி பஸ் நிலையத்தில் விடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.