சென்னை இராயப்பேட்டை அருகே, ஓடும் காரில் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர் தப்பியுள்ளனர். சென்னை ராயப்பேட்டை சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீரென்று கரும்புகை வெளியேறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுனரும், அவருடன் இருந்தவரும் காரிலிருந்து உடனே கீழே இறங்கினர்.
அதன் பின்னர் காரின் முன் பகுதியில் தீ பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் பற்றி அறிந்த தீயணைப்பு துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக ராயப்பேட்டை மேம்பாலத்தின் ஒரு பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் இதுபற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் ராயப்பேட்டை சேர்ந்த முகமது ரபிக் என்பதும், பழைய காரை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விலைக்கு வாங்கியதாக தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக ஓடும் காரில் தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.