நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அமுல்நகர் பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வரதராஜன் அவரது மனைவி மற்றும் மகளுடன் தனது வீட்டை பூட்டி விட்டு ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், மோதிரம் உள்பட 9 1\2 பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை எடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதன் பின் வீட்டிற்கு திரும்பிய வரதராஜன் நகைகள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து வரதராஜன் செல்வபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதே போன்று சுந்தராபுரம் மாரியம்மன் கோவில் வீதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுரி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கவுரி வரலட்சுமி விரத பூஜையை முன்னிட்டு தனது 30 பவுன் தங்க நகைகளை கழற்றி பீரோவில் வைத்திருந்தார். இதனையடுத்து கவுரி பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கவுரி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.