நிலத்தகராறில் கூலித்தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள தாமரைப்பாக்கம் கிராமத்தில் ஆலடியான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும், இவருடைய மூத்த மகன் ஏழுமலையும் பெங்களூரில் தங்கி கூலித்தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் வசித்து வரும் ராமமூர்த்தி என்பவர் ஆலடியானுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஆலடியனுக்கும், ராமமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி அன்று வெளியே சென்ற ஏழுமலை வீட்டிற்கு திரும்பவில்லை.
இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் ஏழுமலையை தேடியுள்ளனர். இந்நிலையில் மாதிமங்கலம் செல்லும் பைபாஸ் பகுதியில் ஏழுமலையான் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஏழுமலையின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில் ஏழுமலை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய தீவிர விசாரணையில் ஏழுமலையை கொலை செய்தது ராமமூர்த்தியின் மகனான கோடீஸ்வரன் மற்றும் அவரது உறவினர் கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கொலை வழக்கு திருவண்ணாமலை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றுள்ளது. இதனை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், நிலத்தகராறில் ஏழுமலையை கொலை செய்த கோடீஸ்வரனுக்கும், கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோடீஸ்வரனை வேலூரில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் அடைத்துள்ளனர்.