Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள்

எங்களுக்கு தரவே இல்லை…. எம்.பி.யிடம் கேட்டபின் கிடைத்தது…. நன்றி தெரிவித்த மாணவிகள்….!!!

எம்.பி அப்துல்லா பரிந்துரையால் மாணவிகளுக்கு தமிழ்வழி பயின்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதுகலை ஆசிரியருக்கான பணியிடங்கள் நிரப்பப்படும்போது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. இதனையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும்போது அதற்கான சான்றிதழை உடன் இணைக்க வேண்டும். அதன்பின் 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்வழி பயின்ற மாணவிகளுக்கு அதற்குரிய சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருந்தது. அந்த கல்லூரியில் தமிழ்வழி படித்த முன்னாள் மாணவிகள் தங்களுக்கு சான்றிதழ் வழங்குமாறு கல்லூரிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.

ஆனால் அதற்கு கல்லூரி நிர்வாகமானது சரியான பதிலளிக்காமல், தமிழ்வழி படித்தவர்களுக்கான சான்றிதழை வழங்காமல் மாணவிகளை அலைக்கழிக்க செய்தனர். இதனால் முன்னாள் மாணவிகள் மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி அப்துல்லாவை சந்தித்து இதுகுறித்து முறையிட்டனர். இதனைதொடர்ந்து அப்துல்லா கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு மாணவிகளுக்கு தமிழ்வழி பயின்ற சான்றிதழை வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்பின் அனைத்து மாணவிகளுக்கும் கல்லூரி நிர்வாகம் தமிழ்வழி பயின்றதற்கான சான்றிதழ்களை வழங்கியது. இதன் காரணமாக அனைத்து மாணவிகளும் அப்துல்லாவுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Categories

Tech |