வாடிக்கையாளரின் குழந்தையை பயங்கரமான குழந்தை என்று கட்டண ரசீது வழங்கியதற்குக் காப்பி சூப்ரீம் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியிலுள்ள காப்பி சூப்ரீம் என்ற கஃபே கடைக்குத் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார் கிம்பர்லி ஸ்ஸே. அப்போது, கஃபே ஊழியர்கள் வழக்கமான விலையை விட அதிகமாகக் கூறியதால் அவர்களிடம் ரசீது கேட்டுள்ளார்.அப்போது அவருக்கு வழங்கப்பட்ட ரசீதுதான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அதில் ‘Fam w the terrifying kid’, அதாவது ‘பயங்கரமான குழந்தையுடன் வந்த குடும்பத்துக்கு’ (Family with the terrifying) என்று குறிப்பிட்டுள்ளனர்.இந்த ரசீதை கிம்பர்லி சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மேலும் அதில், தனது குழந்தை யாருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதில்லை என்றும் பலரும் தன் குழந்தையைச் சமத்தான குழந்தை என்றே கூறியுள்ளனர் எனவும் இட்டுள்ளார்.
இது சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து காப்பி சூப்ரீம் நிறுவனத்தின் மேலாளர், கிம்பர்லி ஸ்ஸேவை சந்தித்துத் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கு இந்த வார இறுதிவரை காப்பி, சாக்குலேட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.