சகோதரர் அளித்த புகாரின் படி மூதாட்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறுத்தொண்ட நல்லூர் பகுதியில் ஜபூர் நிஷா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு இவரது கணவர் அமீர் அலி இறந்து விட்டதால் நிஷா தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி திடீரென உயிரிழந்த ஜபூர் நிஷாவின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டனர். இந்நிலையில் ஜபூர் நிஷாவின் தம்பியான முகமது இலியாஸ் என்பவர் ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவில் தனது அக்காவின் நகை மற்றும் பணத்திற்காக ஆசைப்பட்டு பராமரிப்பு பணியில் இருந்த பெண் அவரது கணவருடன் இணைந்து ஜபூர் நிஷாவை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வருவாய் துறையினர் முன்னிலையில் ஜபூர் நிஷாவின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர். மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பிறகு அந்த இடத்திலேயே மூதாட்டியின் சடலம் புதைக்கப்பட்டது. இதனையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு மூதாட்டியின் இறப்பிற்காக உண்மை காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.