கர்நாடக மாநிலத்தில் ஒரு காளை மாட்டின் பிறந்தநாளை ஒரு ஊரே சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம் கேரிமிட்டிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான லிங்கராஜ்,பிரகாஷ், மால்தேஷ், கர்பாசு ,பசவராஜ் மற்றும் சித்தி ஆகியோர் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காளை கன்று குட்டியை வாங்கி வளர்த்து வந்துள்ளனர். அதன் பெயர் ராட்சஷா என்பதாகும். நாட்கள் செல்லச் செல்ல அந்த காளைக்கு ஊர் முழுவதும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த காளைக்கு ஆறாவது பிறந்த நாள் வந்துள்ளது. இதனை அந்த கிராமம் முழுவதும் கேக் வெட்டி வெகு விமர்சையாக கொண்டாடி உள்ளது. மேலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி கிராமம் முழுவதும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அந்த கிராமத்தினர் நூறு பேர் சேர்ந்து இரத்ததான முகாம் நடத்தி உள்ளனர். அதில் 54 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.