தமிழகத்தில் பயோ மைனிங் முறையில் சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கை அகழ்ந்தெடுத்து, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அந்தப்பகுதியை சீர் செய்வதற்கான திட்டங்களை பார்வையிட்டு அதில் ஒரு பகுதியை இன்று அமைச்சர் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்துள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள 235 ஏக்கர் குப்பை கிடங்கை இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், போன்றோர் அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, குப்பைகளை மக்கும் குப்பை,மக்காத குப்பை என்று பிரிப்பதே நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மிகவும் சவாலாக இருக்கிறது. பல பேரூராட்சிகளில் குப்பைகள் கொட்டுவதற்கான இடங்களை தேடுவதே பிரச்சனையாக இருக்கிறது. அதனால் பிளாஸ்டிக், உலோகங்கள், மக்கும் குப்பைகள், பிரிப்பதற்காக டெண்டர்க்கு விடப்பட்டுள்ளது. நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேயராக இருந்த போது இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் காரணமாக 10 ஆண்டுகள் எதுவுமே செய்யாமல் விட்டுவிட்டனர்.
பெருங்குடி பகுதியில் 235 ஏக்கரில் 34,லட்சத்து 2000 டன் பழைய குப்பைகள் மட்டும் இருக்கிறது. அதை பயோ மைனிங் முறை முறையில் பெருங்குடி பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் ஆறு பாகங்களாக பிரித்து அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பகுதியை மீட்டெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கொடுங்கையூரில் அடுத்த 6 மாதத்தில் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று பேசியுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை மாநகரின் மேயராக இருந்த போது குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. ஆட்சி மாற்றத்தால் இதை செய்ய முடியவில்லை. இந்த குப்பைகளை எடுத்து பிரித்து நீக்கக்கூடிய திட்டமானது சென்னைக்கு விடியல் தரும் என்று கூறியுள்ளார். மேலும் கொடுங்கையூர் குப்பை மேட்டு பகுதி நிலத்தையும் பசுமையாக மாற்றுவதற்கு அரசு முயற்சித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.