சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பயணிகள் பேருந்து ஒன்று அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த கனமழையால் சிஜியாஜுவாங் நகரின் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த ஆற்றின் பாலத்தை கடக்க முயன்ற ஒரு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பேருந்தில் பயணித்த 51 பயணிகளில் 2 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 37 பேரை மீட்புப் படையினா் பத்திரமாக மீட்டுள்ளனர். குறிப்பாக ஆற்றில் அடித்து சென்ற 12 பேரை பற்றி எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து ஹீபெய்யின் அண்டை மாகாணமான சாங்ஷியில் பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. அந்த பகுதியிலிருந்து 1.20 லட்சம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். மேலும் 1.90 லட்சம் ஹெக்டெர் பயிா்கள் கனமழையால் சேதமடைந்துள்ளன.
இந்த மாகாணத்தின் பிங்யாவோ நகரத்தில் உலக பாரம்பரியமிக்க சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சுவா் ஒன்று உள்ளது. அந்த பகுதியில் பெய்த கனமழையால் சுவரில் 25 மீட்டா் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசின் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.