கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து மராட்டிய மாநிலத்தில் வரும் அக்டோபர் 22 முதல் திரையரங்குகளை திறக்க மராட்டிய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு எந்த துறையையும் விதிவில்லக்கல்ல, இதில் கடுமையாக பாதிக்கப்பட்டவைகளில் சினிமா மற்றும் திரையரங்குகளும் ஒன்றாகும். தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் மீண்டும் திரையரங்குகளை இயக்குவது தொடர்பாக சினிமா திரைப்பட தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டி மற்றும் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் கடந்த மாதம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 50 சதவிகிதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை மீண்டும் திறக்கலாம் என மகாராஷ்டிர அரசு கூறியுள்ளது. மேலும் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.