இலவச கொரோனா தொற்று பரிசோதனையானது அனைவருக்கும் வழங்கப்படமாட்டாது என்று ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது.
உலகில் உள்ள பல்வேறு நாடுகள் மக்களுக்கு இலவச கொரோனா தொற்று பரிசோதனையை செய்தவற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெர்மனி அரசு இலவச கொரோனா தொற்று பரிசோதனையானது அனைவருக்கும் வழங்கப்படமாட்டாது என்று அறிவித்துள்ளது. குறிப்பாக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் ஜெர்மனி மக்கள் ஆன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் மற்ற நாடுகளில் உள்ளது போல உணவகங்கள் முதலான பொது இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் எதிர்மறையான முடிவு வந்த சான்றிதழை சான்றாக காட்ட வேண்டும் என்ற விதியும் ஜெர்மனியில் உள்ளது. அதிலும் சிலர் தடுப்பூசி பெறுவதற்கு பதிலாக இலவச பரிசோதனைகள் செய்து தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை ஆதாரமாக காட்டி வருகின்றனர்.
ஆனால் தற்போது இந்த முடிவு கொண்டு வரப்பட்டதால் கொரோனா சான்றிதழ் வாங்குவதற்கு கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாதவர்கள் போன்றோருக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மட்டும் கொரோனா தொற்று பரிசோதனை இலவசமாக செய்யப்படும்.
மேலும் 12 முதல் 17 வயது வரை உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி வரை இலவச கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையினரால் பரிந்துரைக்கப்படுபவர்களும் இலவசமாக PCR பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கொரோனா தொற்றுக்கான அறிகுறி உடைவயர்கள் இலவச PCR பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.