கொட்டப்பட்ட ரசாயன கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சுண்ணாம்புக்கல் மேடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டி வெள்ளை நிற மண் தொடந்து கொட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அந்த வெள்ளை நிற மண்ணில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் விசாரணை செய்ததில் ரசாயன கழிவுகளுடன் மண் பள்ளத்தில் கொட்டப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் குழிதோண்ட பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் மற்றும் மண்ணை அள்ளிவந்த டிப்பர் லாரி ஆகியவறை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பரமத்திவேலூர் தாசில்தார், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது இப்பகுதியில் ரசாயன கழிவுகள் கொட்டபடுவதால் நிலத்தடி நீர், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், மிகுந்த துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே ரசாயன கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து பொதுமக்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.