பிரிட்டனில் ஒரு நபர் லாட்டரியில் £9.7 மில்லியன் பரிசு வென்ற நிலையில், தவறான பழக்கத்தால் மொத்தமாக பணத்தை இழந்து பரிதாபமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
பிரிட்டனில் உள்ள Norfolk பகுதியில் வசிக்கும் 38 வயது நபர் மிக்கி கரோல். இவர், கடந்த 2002ஆம் வருடத்தில் 19 வயது இளைஞராக இருந்த சமயத்தில் லாட்டரியில் £9.7 மில்லியன் பரிசுத்தொகை விழுந்திருக்கிறது. அப்போது, மிக்கிக்கும், சாண்ட்ரா ஐகன் என்ற பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.
சிறிய வயதில், அதிக பணத்திற்கு சொந்தக்காரரான மிக்கிக்கு, பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் அதிகளவு, போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கியதோடு, பெண்களுடன் தவறான பழக்கம் வைத்திருந்துள்ளார். மேலும், பார்டிக்கு செல்வது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டார்.
அதன்பின்பு, அவர் சாண்ட்ராவை திருமணம் செய்திருக்கிறார். எனினும் தவறான பழக்க வழக்கங்களை அவர் விடவில்லை. இதனால், சாண்ட்ரா, கடந்த 2008 ஆம் வருடத்தில் மிக்கியை பிரிந்து சென்றார். அதன் பின்பு முழுமையாக போதைக்கு அடிமையாகி, மொத்த பணம் மற்றும் தான் வாழ்ந்து வந்த பிரம்மாண்ட வீட்டையும் இழந்து விட்டார்.
மேலும், தான் செய்த குற்றங்களுக்காக பல தடவை சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். அதன் பின்பு, ஒரு வழியாக இதற்கு மேலும் தவறு செய்தால், உயிரிழக்க நேரிடும் என்ற பயத்தில் திருந்தி வாழ தொடங்கியிருக்கிறார். அதன்பிறகு, திருந்தி வாழும் மிக்கியை ஏற்றுக்கொண்ட சாண்ட்ரா மீண்டும் அவரையே திருமணம் செய்து கொண்டார்.
மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆக வாழ்ந்து வந்த மிக்கி, தற்போது நிலக்கரி விற்பனை மற்றும் மர வேலைகள் செய்து வருகிறார். விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து வாரத்தின் ஏழு நாட்களும் வேலை செய்து வாழ்ந்து வருகிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, நான் தற்போது சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி விட்டேன். என் மனைவியை மீண்டும் திருமணம் செய்தது, என் வாழ்க்கையில் நடந்த மிகுந்த மகிழ்ச்சியான தருணம்.
அவ்வளவு பணம் என்னிடம் தற்போதும் இருந்திருந்தால், நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். ஏனெனில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உயிரிழந்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.