திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா 3-வது அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததும், 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா நோயாளிகள் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துவிடக்கூடாது என்பதற்காக ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். அதன் பலனாக தமிழகத்தில் இதுவரை 222 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தில் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் 2 அல்லது 3 மாதங்கள் மட்டும் வேலை பார்த்து இருந்தாலும் அவர்கள் அனைவரையும் வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை தொடர்ந்து பணியாற்ற அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தையும் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறிஉள்ளார்.