சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரையானது உலகிலேயே மிக நீண்ட கடற்கரையாகும். இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்களும், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் பொழுதுபோக்கிற்காக வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இவர்களில் சிலர் கடலில் இறங்கி குளிக்கின்றனர். அப்போது ஒரு சில மாணவர்கள் கடலோ அலையில் சிக்கி உயிர் இழக்கும் சோகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக சென்னை மெரினாவில் குளிப்பதற்கு மாநகர காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுகுறித்து மாநகர உதவி காவல் ஆணையர் விடுத்துள்ள எச்சரிக்கையில், சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள். கடல் அலையின் சீற்றம் வேகமாக உள்ளதால் கடலில் இறங்கி குளிக்க அனுமதிக்காதீர்கள். அப்படி அனுமதித்தால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இழக்கும் வாய்ப்புள்ளது. எனவே பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருங்கள். அவசர உதவிக்கு 94981 00024 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள். காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி கடலில் இறங்கி விளையாடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.