சென்னை தி நகரில் உள்ள தியாகராயர் அரங்கில், “ஜெயித்துக்காட்டுவோம் வா” என்ற தலைப்பில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உமா சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பேச்சாளர் சுகி சிவம், நடிகர் ஆர்ஜே பாலாஜி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், அவர்களை கண்டிப்பது அவர்களின் நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், பிறரோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் தான் வருங்கால தலைவர்கள் எனவே மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மாணவர்களான நீங்கள் வெற்றி பெற்றால் சிலை ஆகுங்கள் இல்லையெனில் சிற்பியாக இருங்கள் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, முதல்வர் முக. ஸ்டாலின் தொடர்ந்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். எனவே மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து, நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 20% மாணவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.
எனவே அவர்களிடம் திரும்பித் திரும்பி பேசி வருகின்றோம். மேலும் கல்வி தொலைக்காட்சியில் 3 மணி முதல் 5 மணி வரை இரண்டு நாட்களுக்கு மீண்டும் மீண்டும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளோம் என்றும், தமிழக முதல்வர் 12 மாநில முதல்வர்களுக்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதற்கான அவசியத்தைப் பற்றி பேசி உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.