நல்லவர் போல பேசி நடித்து குழந்தையை திருடிய பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பர்மா காலனியில் கட்டிட தொழிலாளியான குணசேகரன் என்பவர் தனது காதல் மனைவியான ராஜலட்சுமியுடன் வசித்து வருகிறார். ராஜலட்சுமி கர்ப்பமடைந்த நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ராஜலட்சுமியிடம் ஒரு பெண் தனது உறவினர் பெண்ணின் பிரசவத்திற்காக வந்ததாக கூறி அவரிடம் பழகியுள்ளார். மேலும் அவர் ராஜலட்சுமிக்கு உதவி செய்வது போல பாவனை செய்துள்ளார்.
அப்போது ஒரு நாள் அந்தப் பெண் ராஜலட்சுமி இடம் நீங்கள் குளித்துவிட்டு வாருங்கள் நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணிடம் தனது குழந்தையை ஒப்படைத்து விட்டு ராஜலட்சுமி குளிப்பதற்காக சென்றுள்ளார். அதேசமயம் ராஜலட்சுமியின் கணவர் கடைக்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு அந்தப் பெண், குழந்தையை ஒரு கட்டைப்பையில் வைத்து வேகமாக சென்றுள்ளார். இதற்கிடையில் குளித்து விட்டு திரும்பிய ராஜலட்சுமி குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து பல இடங்களில் அவர் குழந்தையை தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இந்த தகவலை உடனே தனது கணவருக்கு தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் மருத்துவமனை முழுவதும் குழந்தையை தேடி பார்த்தும் எங்கும் கிடைக்காததால் பதறியபடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் இருந்து வந்த பெண் கட்டைப்பையில் குழந்தையை வைத்து கடத்தி சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதனை சாட்சியாக வைத்து காவல்துறையினர் குழந்தையை கடத்தி சென்ற அந்தப் பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.