டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கிகளில் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்ய இமெடியட் பேமென்ட் சர்வீஸ் என்ற முறையையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். அதுபோக ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெப்ட் போன்ற முறைகளும் மிக அரிதாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் முறையின் மூலம் ஒரு வாடிக்கையாளர் மற்றொரு வாடிக்கையாளருக்கு பணம் அனுப்பவும் பெறவும் காத்திருக்க வேண்டியது இல்லை. அந்த தொகை உடனடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் இந்த சேவையை 24 மணி நேரமும் பயன்படுத்த முடியும். எல்லா நாட்களிலும் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பு.
எனினும் இந்த சேவையை பயன்படுத்தி நாளொன்றுக்கு 2 லட்சம் வரை மட்டுமே அனுப்ப முடியும் என்ற வரம்பு பல வணிகர்களை சிக்கலுக்கு உள்ளாக்கியது. இந்த வரம்பை அதிகரிக்க வேண்டும் என வணிகர்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இதனை ஏற்றுக்கொண்ட ரிசர்வ் வங்கி இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஐ.எம்.பி.எஸ் முறையில் பணம் அனுப்புவதற்கான தினசரி வரம்பு 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.