வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பயணிகள் விமானம் துருக்கியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
குவைத்திலிருந்து Jazeera ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சில மணி நேரத்திலேயே அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விமானமானது துருக்கியில் உள்ள Trabzon விமான நிலையத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டது. மேலும் அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தனியான இடத்தில் வைத்து அவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான தகவலை Trabzon ஆளுநர் Ismail Ustaoglu சமூக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து Jazeera ஏர்வேஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “எங்களுக்கு விமானத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக அழைப்பு ஒன்று வந்துள்ளது. நாங்கள் அதனை ஆராய்ந்த போது உண்மையானதல்ல என்று தெரியவந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் மற்றும் விமான குழுமத்தின் பாதுகாப்பிற்கான பணியை குவைத் மற்றும் எங்களது இணைப்பில் உள்ள அதிகாரிகள் மேற்கொண்டனர்.
மேலும் அனைத்து விமானங்களுக்கும் கூடுதல் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக Jazeeraவின் பாதுகாப்பு குழு அனைத்தையும் தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனை தொடர்ந்து காலதாமதத்திற்காக பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த பயணிகள் விமானத்திற்கு மட்டுமின்றி அதே நேரத்தில் பல குவைத் விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.