ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மலேரியாவிற்கு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி முதன்முதலாக செலுத்தப்பட்டு வருகிறது.
பிரிட்டனில் கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் (GlaxoSmithKline) எனும் மருந்து நிறுவனம், மலேரியா காய்ச்சலுக்கு எதிராக மாஸ்குயிரிக்ஸ் (Mosquirix) அல்லது RTS, S என்ற தடுப்பூசியை கடந்த 1987-இல் தயாரித்தது. ஆனால் இதன் செயல்திறனானது 30 சதவீதம் மட்டுமே கொண்டது . எனவே, இதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதிருந்து கானா, கென்யா மற்றும் மலாவியில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 2019 முதல் மேம்படுத்தப்பட்ட மலேரியா தடுப்பூசி போடப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த புதன்கிழமை ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தடுப்பூசி பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் முதன்முறையாக ஆப்பிரிக்காவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் “வரலாற்று தருணம்” என்றும் இது ஆண்டுக்கு 260,000 குழந்தைகளைக் கொன்றுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மலேரியாவுக்கு எதிரான மற்றொரு R21/Matrix-M என்னும் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.
இதனை ஆராய்ச்சியாளர்கள் ஏப்ரல் மாதத்தில் புர்கினா பாசோவில் 450 குழந்தைகளில் ஒரு வருடமாக மேற்கொண்ட ஆய்வின் முடிவில் 77% செயல்திறனைக் காட்டியது. ஆனால் இது இன்னும் சோதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலேரியாவுக்கு எதிரான போராட்டமானது கோவிட் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நோய் கொரோனா வைரஸை விட மிக கொடுமையானது என்று கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் கடந்த 18 மாதங்களில் 212,000 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு பதிவாகியுள்ளது. மேலும், WHO ஆராய்ச்சிகளின்படி, இந்த நோய் 2019 இல் 386,000 ஆப்பிரிக்கர்களைக் கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.