மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட மூதாட்டி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகின்ற காரணத்தினால் 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 12-ஆம் தேதியும் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குத்தம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அதிவேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் 411 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மொத்தமாக வாங்கி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோவில் பயணம் செய்த குப்பம்மாள் என்ற மூதாட்டி உள்பட இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர்.