ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் கமலேஷ் மீனா. 25 வயது வாலிபரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த மாதம் 26 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் கமலேஷ் மீனாவை மறுநாளே கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்ட கமலேஷ் மீனா போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த ஜெய்ப்பூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் கமலேஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 5 நாட்களில் விசாரணையை முடித்து விட்டது. அதாவது குற்றவாளி கமலேஷ் மீனாவுக்கு நேற்று 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி விகாஸ் குமார் உத்தரவு பிறப்பித்தார். மேலும் அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வெறும் ஒன்பதே நாட்களில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற துரிதமாக செயல்படும் நீதிமன்றங்களால் குற்றங்கள் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.