சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை வடக்கு தெருவில் கூலித்தொழிலாளி நடராஜன் வசித்து வந்தார். இவர் சாப்பாடு வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து கடையில் சாப்பாடு வாங்கிக்கொண்டு வேலைக்கு செல்வதற்காக நடராஜன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடராஜன் மெயின்ரோட்டில் சென்றபோது பின்னால் வந்த ஒரு லாரி சைக்கிள் மீது மோதியது.
இதனால் கீழே விழுந்த நடராஜன் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதால் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் நடராஜனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நடராஜனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நடராஜன் மகன் ராஜ்குமார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் குள்ளக்காலிகாட்டை சேர்ந்த சரவணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.