Categories
அரசியல்

பிரியங்கா காந்தி கைது… கொந்தளித்த காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை…!!!

எம் எல் ஏ செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நேற்றைய தினம் உத்திரபிரதேசம் லக்கிப்பூர் தொகுதியில் விவசாயிகள் ஜனநாயக முறைப்படி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஒரு வருடத்திற்கு மேல் இந்த  போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டக்காரர்கள் மீது ஒன்றியத்தின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவினுடைய மகன் காரில் வந்து போராடுகின்ற விவசாயிகளை இரண்டு பேரை ஏற்றிக் கொலை செய்கிறார்.

இந்த கொலையை கண்டித்து விவசாயப் பெருங்குடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் பிரசாத் மவுரியா அவர்களும் ஒன்றியத்தின் இணை உள்துறை அமைச்சர் அவர்களும் அவருடைய மகனும் சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கி இருக்கிறார்கள்.

இன்று வரை 9 பேர் இறந்திருக்கிறார்கள். ஒருவர் பத்திரிக்கையாளர் ராம்கான்ஷியப்.  இவர்கள்  பத்திரிக்கையாளரையே  விட்டுவைக்கவில்லை. செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளரை  படுகொலை செய்திருக்கிறார்கள். இதுவரை ஒன்பது படுகொலை. இந்த படுகொலையை கண்டித்து எங்களுடைய தலைவர் பிரியங்கா காந்தி வதாரா அவர்கள் இறந்தவர்களுடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல போனார். ஆறுதல் சொல்ல சென்றவரை எவ்வளவு கேவலமாக மிகவும் மோசமாக நடத்தமுடியுமோ, காவல்துறை நடத்தி பிடித்து கீழே தள்ளி அவமான படுத்தி இருக்கிறார்கள்.

கைது செய்திருக்கிறார்கள். அவர் செய்த தவறு என்ன? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் செல்வது தவறா? சத்தீஷ்கார் முதலமைச்சர் அந்த மாநிலத்தின் பொறுப்பாளர் காங்கிரஸ் பேரியக்கத்துனுடைய பொறுப்பாளர் அவர் விமானம் இறங்குவதற்கு அனுமதி தரவில்லை. பஞ்சாப் அமைச்சர்களை உள்ளே விடவில்லை. புதுதில்லியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளே விட வில்லை. இதற்கு மாறாக யோகி அவர்கள் தலைமை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். காங்கிரஸ்காரரை உத்தரபிரதேசத்தில் அனுமதிக்கக் கூடாது என்று. இது என்ன ஜனநாயகத்தின் பால் இயங்குகின்ற ஆட்சியா? காட்டுமிராண்டியினர் ஆட்சியா? மோடி தொடர்ந்து ஏழு வருடங்களாக ஏழை எளிய மக்கள் மீது, சிறுபான்மை மக்கள் மீது, விளிம்புநிலை தலித் மக்கள் மீது தன்னுடைய ஆயுதங்களைப் பிரயோகிக்கிறார்.

ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் போராடுவதற்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமைகளை பறிப்பது தான் மோடி உடைய வேலையாக இருக்கிறது. யோகி  உடைய வேலையாக இருக்கிறது. ஏற்கனவே அர்த்ராசில் நடந்த படுகொலை கற்பழிப்பு காரணமாக அர்த்ராஸ் கிராமத்திற்கு போகும் போது எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பிடித்து தள்ளினார்கள், பிரியங்கா காந்தி அவர்களை கையை பிடித்து இழுத்தார்கள், காவல்துறை மீண்டும் அப்படிப்பட்ட அநியாயத்தை அங்கு அரங்கேறி இருக்கிறது. இதை காங்கிரஸ் பேரியக்கம் மகிளா காங்கிரஸ் கட்சி சார்பாக  வன்மையாக கண்டிக்கிறோம். நாளையும் காலை போராட்டம் தொடர இருக்கிறது.

யோகி நிபந்தனையற்ற மன்னிப்பு எங்கள் தலைவர் பிரியங்கா  காந்தியிடம் கேட்க வேண்டும்.  உடனே ராஜினாமா செய்ய வேண்டும். இன்னும் சிறிது காலங்களில் அங்கு தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலிலே வெற்றி பெறுவதற்கு தவறான வகையில் ஜனநாயகத்துக்கு முரணான வகையில் என்னென்ன கையாள முடியுமோ! அதை அங்கே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். ஆகவே இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம். பிரியங்கா காந்தியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். யோகி உடனே ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கூறினார்.

அப்பொழுது செய்தியாளர்களில் ஒருவர், “தற்பொழுது சமூகவலைத்தளத்தில் ஒரு காணொளி பரவி வருகிறது. அதில்  பிரியங்கா காந்தி அவர்கள், அவருடைய அறையை அவரே சுத்தம் செய்யும் வீடியோ பதிவாகியுள்ளது. அவர்கள் சுத்தமற்ற அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்துள்ளது” என்ற கேள்வியை கேட்டதற்கு பதிலளித்த அவர், “மோடியுடைய யோகியுடைய இரண்டு பேருடைய நோக்கமே எதிர்க்கட்சிகளை நசுக்க வேண்டும். அவர்களை பழிவாங்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களை அவமானப்படுத்த வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும். எல்லோரையும் அழித்துவிட்டு ஹிட்லர் போல் தான் இருக்கலாம் என்று விரும்புகிறார். அது ஒருபோதும் நடக்காது வருகின்ற தேர்தலிலே  இந்த மக்களுடைய குமுறல் எதிரொலிக்கும்” என தெரிவித்தார்.

Categories

Tech |