ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 30, 31ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரவிசங்கர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அவதிக்குள்ளாகிவருகின்றனர். அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தோல்வியைத் தழுவியது.இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ரவிசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், “அரசு மருத்துவர்கள் பலகட்ட போராட்டம் நடத்தியும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.இல்லையெனில் அக்டோபர் 30, 31ஆம் தேதிகளில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் 18 ஆயிரம் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள். மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், இந்தப் போராட்டம் நடத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.