14 -வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்குகிறது. இதில் புள்ளி பட்டியலில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது .இதனிடையே மீதமுள்ள 3-வது மற்றும் 4-வது இடங்களுக்கு மற்ற அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் நடப்பு சீசனில் இந்தியாவில் நடந்த முதற்கட்ட போட்டியில் சொதப்பி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாம் பகுதி ஆட்டத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது .அதோடு கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் குறிப்பாக அணியில் தொடக்க வீரரான வெங்கடேஷ் ஐயர் தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளார் .பேட்டிங்கில் மட்டுமின்றி பவுலிங்கிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் .இதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இவரை எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,” ஐபிஎல் ஏலத்தில் வெங்கடேஷ் ஐயர் சுமார் 12 முதல் 14 கோடி வரை ஏலத்துக்கு போவார் .அதோடு உள்ளூர் போட்டிகளிலும் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார். இதனால் அவர் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று கூறியுள்ளார்.