மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஒக்கிலிபட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கவிதா என்ற மனைவியும், கவின் என்ற மகனும், நிரஞ்சனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கவிதா வீட்டில் துணிகளை துவைத்து விட்டு அவரது வீட்டிற்கு அடுத்துள்ள ரங்கசாமி என்பவரின் வீட்டு மாடியில் துணிகளை காய போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது துணிகளை அங்கிருந்த கம்பியில் போட்டபோது திடீரென கவிதாவை மின்சாரம் தாக்கியுள்ளது.
இதில் பலத்தகாயமடைந்து கவிதா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர் மயங்கிவிழுந்த கவிதாவை மீட்டு திருச்செங்கோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கவிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற திருச்செங்கோடு ஊரக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.