தமிழகத்தில் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்க கால்நடை துறை சார்பில் மானிய கோரிக்கையின் போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 38000 பேருக்கு தலா 5 ஆடுகள் வழங்க 75.63 கோடி மதிப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் 15ஆம் தேதிக்குள் இதற்கான பணியை துவங்க கால்நடை துறைக்கு தெரிவித்துள்ளது.
இதில் முதல் கட்ட பணியாக ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு 100 பெண்கள் என்ற அடிப்படையில் 388 பஞ்சாயத்து யூனியன் முழுவதும் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதத்திற்குள் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து 2வது கட்ட பணியாக டிசம்பர் முதல் ஜனவரி ஆகிய மாதத்திற்குள் பயனாளிகள் அனைவருக்கும் ஆடுகள் வழங்கப்படும் என்று கால்நடை துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கான பணிகளை மாவட்ட வாரியாக ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து இப்பணியை மேற்கொள்வார் என்று தெரிவித்துள்ளனர்.