திருப்பூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், எம்ஜிஆர், வைகோ எல்லாம் திமுகவில் இருந்து வெளியேறிய துரோகிகள். இனியும் இது போன்ற துரோகிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேசியிருந்தார். இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், அமைச்சர் துரைமுருகன் எம்ஜிஆர் அவர்களை துரோகி என்று கூறியிருப்பது “சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது” அண்ணா அவர்களின் மறைவிற்கு பிறகு அடுத்த நிலையில் உள்ள அனுபவம் மிக்கவர் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக வருவார் என்று ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், கருணாநிதி அவர்களை முதலமைச்சராக ஆக்கிய புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பார்த்து நம்பிக்கை துரோகி என்று துரைமுருகன் செல்வது கடும் கண்டனத்துக்குரியது.
அவர் தான் கடந்து வந்த பாதையை மறந்து விட்டு பேசுகிறாரா? அல்லது மறைத்துவிட்டு பேசுகிறாரா? என்று தெரியவில்லை. நம்பிக்கை துரோகம் என்று அவர் கூறிய உடன் எங்களுடைய நினைவுக்கு வருவது “உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது” என்ற பழமொழி தான். இதை செய்தவர்கள் யார்? என்பதை முதலில் துரைமுருகன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.