பள்ளி, கல்லூரி பேருந்துகளில் உரிய வசதிகள் இல்லை என்றால் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் பாதுகாப்பு வசதிகள் இல்லாத கல்லூரி பேருந்து உரிமங்கள் ரத்து செய்யப்படும் என வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை செய்துள்ளார். இந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு வரை இருக்கும் பள்ளிகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்பின் ஜெயின் மகளிர் கல்லூரி மைதானத்தில் முதல் கட்டமாக தனியார் பள்ளியின் 25 பேருந்துகள் ஆய்வுக்காக கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.
அப்போது கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் கொண்ட குழுவினர் பேருந்துகளை ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வில் 25 பேருந்துகளில் போதுமான முதலுதவி பெட்டிகள் அமைக்கப்படவில்லை மற்றும் பாதுகாப்பு வசதி இல்லாத காரணத்தினால் அதை சரிசெய்து மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு சிறப்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி கூறும் போது, பள்ளிக்கு வருகின்ற மாணவ-மாணவிகளை அழைத்து செல்லும் போது மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களை ஏற்றி செல்லும் போது அதற்கான நடத்துனர்கள் முறையாக மாணவ-மாணவிகளை ஏற்றி இறக்கி விட வேண்டும். இதனைத் தொடர்ந்து தற்போது கூறிய அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்யவில்லை என்றால் வாகனங்களில் உரிமங்கள் ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.