கோவை மாவட்டத்தில் ரெட் பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சிக் கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக டெல்லியில் இருந்து வந்த பெண் அதிகாரியை மற்றொரு அதிகாரி அமித்தேஷ் ஹர்முக் என்பவர் பலாத்காரம் செய்ததாக கமிஷனர் அலுவலகத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் கூறியிருப்பது, டெல்லியை சேர்ந்த நான் விமானப்படையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகின்றேன். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியிலிருந்து பயிற்சிக்காக கோவை மாவட்டம் ரெட் பீல்டில் உள்ள விமானப்படை நிர்வாகவியல் பயிற்சிக் கல்லூரிக்கு வந்து சேர்ந்தேன்.
அங்கு என்னுடன் சேர்ந்து 30க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியை மேற்கொண்டனர். அதையடுத்து கடந்த 10ஆம் தேதி நான் பயிற்சி செய்யும் போது எனது காலில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்டு எனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். இந்த நிலையில் என்னுடைய அறைக்குள் அதே கல்லூரியை சேர்ந்த மற்றொரு அதிகாரியான சத்தீஷ்கரை சேர்ந்த அமித்தேஷ் ஹர்முக் என்பவர் அத்துமீறி எனது அறைக்குள் நுழைந்து என்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கானது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு இருவிரல் பரிசோதனை செய்ததால் இந்திய விமானப்படைக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.