தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் 100 மாணவர்களை தேர்வு செய்து நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு சலுகையை முழுமையாக பெற இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட தேர்வு இன்று முதல் அந்தந்த பள்ளிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்கள், மருத்துவம் மட்டுமல்லாமல், பொறியியல், வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளிலும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை, கோவை மாவட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத்தேர்வு மட்டுமல்லாமல், பொதுத்தேர்விலும் மதிப்பெண்களை உயர்த்த, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து, 750 மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் பொது வினாத்தாள் தயாரித்து, 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில், அதிக மதிப்பெண்கள் பெறும் 100 மாணவர்களை தேர்வு செய்து, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.