காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தை மீட்ட பிறகு இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளதாவது: “சென்னையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமான இடமும், கட்டிடமும், ஆக்கிரமிப்புபட்டிருந்தது. அவை பச்சையப்பன் கல்லூரி எதிரில் அமைந்திருந்தது. மேலும் இந்த கட்டிடத்தை தனியார் கட்டிட வல்லுனர்கள் குழு ஆய்வு மேற்கொள்ள பயன்படுத்தி வந்தனர். அவர்கள் செலுத்த வேண்டியுள்ள 12 கோடி ரூபாய் வாடகையை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரூபாய் 1000 கோடி மதிப்புக்கு மேலான சொத்துக்களை தி.மு.க அரசு பொறுப்பேற்றதும், இந்து சமய அறநிலையத்துறைக்கு மீட்டு கொடுக்கப்பட்டுள்ளன. கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் மேலும் ஆக்கிரமிப்புகள் நடக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்ள அதிகாரத்தின் படி, தக்கார்கள் மற்றும் இணை கமிஷனர்களுக்கு அர்ச்சகர்களை நியமிக்க முழு அதிகாரம் உள்ளன. அர்ச்சகர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு கோர்ட் வழங்கிய தீர்ப்பின்படி நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அதனால் சுப்பிரமணிய சுவாமி தொடுத்துள்ள வழக்கை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும் இந்து கோவில்கள் மட்டும் மூடப்பட்டுள்ளன என்பது தவறான கருத்து. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில்தான் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் மூட்டைகள், காணிக்கையும் நகைகளையும், கட்டி வைத்திருப்பதை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். அவர் பயன்படாத மற்றும் உடைந்த நகைகளை மட்டுமே உறுக்குவதற்காக திட்டமிட்டுள்ளோம். மன்னர்கள், ஜமீன்தார்கள், அறங்காவலர்கள், கொடுத்த நகைகளை உருக்க முயற்சிக்கவில்லை என்று ஓய்வு பெற்ற நீதிபதிகளின் மூலம் சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜி,மதுரை மண்டலத்துக்கு நீதிபதி ஆர்.மாலா திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு போன்றோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு நகைகளை கணக்கிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே ஒதுக்கியுள்ள நகையின் மூலமாக கிடைக்கும் வட்டிப் பணத்தை வைத்து கோவிலில் திருப்பணிகள் நடைபெறும். மேலும் நகைகளை உருக்குவது இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையிலான திட்டம். இதில் ஒரு சிறிய அளவு கூட தவறு நடக்காது என்று ஐயப்பன் மேல் ஆணையாக கூறுகிறேன் என்று அவர் பேசியுள்ளார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் காஞ்சிபுரம் மண்டல இணை கமிஷனர் ஜெயராமன் உதவி கமிஷனர் ஜெயா மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.