5 பேர் இணைந்து வாகன ஓட்டியை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் 1-வது தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதலில் ரவுடியாக இருந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி மற்றும் கொலை உள்பட 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் இருந்துள்ளது. பெரும்பாலான வழக்குகள் முடிந்த நிலையில், ஆறுமுகம் தற்போது மனம் திருந்தி மூன்று சக்கர வாகனம் ஓட்டுனராக இருந்துள்ளார். மேலும் திருமணம் ஆகாத ஆறுமுகம் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 5 மர்ம நபர்கள் திடீரென்று ஆறுமுகத்தின் வீட்டுக்கதவை தட்டியுள்ளனர்.
இதனால் பயந்த ஆறுமுகம், உடனே தன்னை காப்பாற்றுமாறு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் ஆறுமுகத்தின் வீட்டு ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதன் பின் அந்த மர்ம நபர்கள் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத மர்ம நபர்கள் அருகில் கிடந்த கல்லைத் தூக்கி ஆறுமுகத்தின் தலையில் போட்டு விட்டனர்.
இதற்கிடையில் அவரது தாய் சரோஜா மற்றும் உறவினர்கள், அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் காலியான மது பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுபற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு மேற்கொண்டு ஆறுமுகத்தின் கொலைக்கு காரணமான கிளின்டன், ஜெயக்குமார், தேசப்பன், வினோத்குமார் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களுள் ஜெயக்குமார் ஐ.டி.ஐ.யில் ஆட்டோமொபைல் படித்து வருவதும், 18 வயதான சிறுவன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.