வடகொரியா மீண்டும் 2 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா ராணுவம் தகவல் அளித்துள்ளது.
வடகொரிய நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதியில் நேற்று காலை குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை அந்நாட்டு அரசு சோதித்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் ஏதும் வழங்காமல் வடகொரியா சோதனை நடத்தியது உலக நாடுகளுக்கு பதற்றத்தை உண்டாக்கியது. மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது. குறிப்பாக ஐ.நா தடை செய்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதித்ததாக ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் கூறியுள்ளார் .
இது குறித்து அமெரிக்க ராணுவம் “வடகொரியாவின் சோதனையால் அமெரிக்காவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. அதோடு தென் கொரியா மற்றும் ஜப்பானின் பாதுகாப்புக்கும் நாங்கள் உறுதியளிப்போம்” என கூறியது. மேலும் வட கொரியாவின் உரிமையை யாராலும் பறிக்க இயலாது என்று ஐ.நா கவுன்சில் கூறியது. இதனையடுத்து ஐ.நா. பொதுசபை கூட்டத்தில், வட கொரியா அதிபர் கூறியதில், அமெரிக்கா தொடர்ந்து விரோத போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் அமெரிக்காவுடனான உறவை தென் கொரியா முற்றிலும் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.