தேர்தலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த நான்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் இரண்டு இடங்களையும் அதிமுக கைப்பற்றியது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து கூறுகையில், பொதுவாக இடைத்தேர்தலில் அதிகாரத்தில் இருப்பவர்கள் வெற்றி பெறுவது இயல்பான ஒன்றாகும். மேலும் இந்தியாவை பொருத்தவரையில் வாக்கு சீட்டு முறையை கொண்டு வந்து வாக்கு இயந்திரம் முறையை ஒழிக்க வேண்டும் என்றும், பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் பணநாயக முறையை ஒழித்தால் மட்டுமே நல்ல அரசியலையோ நல்ல அரசையோ இங்கே நிறுவ முடியும் என்றும் தெரிவித்தார்.
உலகத்தில் இந்தியா, நைஜீரியா ஆகிய இரு நாடுகளை தவிர வேறு எந்த நாடுகளும் வாக்கு இயந்திரம் முறையை பயன்படுத்தவில்லை. இந்த இரண்டு நாடுகளும் ஊழலில் பெருத்த நாடுகள். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் வாக்குச்சீட்டு முறையை தான் பின்பற்றுகிறார்கள். அதிலும், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்த அன்றே இரவோடு இரவாக மாகாணங்கள் வாரியாக பிரித்து, நேரம் ஒதுக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட்டு அதிபர் யார் என்பதை அறிவித்து விடுகிறார்கள். ஆனால் டிஜிட்டல் இந்தியா என்று சொல்லப்படும் இந்நாட்டில் வாக்கு இயந்திரம் கொண்டு வந்த பின்னரும் 42 நாட்கள் பள்ளிகளில் பூட்டி வைப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.