காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு இளம் சமூக ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் உரையாற்றியுள்ளார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சமூக ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் காலநிலை மாற்றம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவர் தனது இளம் வயதில் இருந்தே சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து சர்வதேச அளவிலான மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அதிலும் பொது மேடைகளிலும் மாநாடுகளிலும் தனது கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்வார்.
அதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த எந்தவொரு அக்கறையும் உலக தலைவர்களுக்கு இல்லை என்று அவர்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த கருத்துக்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிடுவார். இந்த நிலையில் இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரில் இந்த வாரம் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
இந்த மாநாட்டில் சுமார் 190 நாடுகளை சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். இது போன்ற மாநாடுகளை நடத்தினாலும் இளம் தலைமுறையினரின் வேண்டுகோளை உலகத்தலைவர்கள் செவிமடுத்து கேட்டுக் கொள்வது அரிதே என்று கிரேட்டா தன்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார்.