நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் ஒரு சில மாநிலங்களில் முறையான கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை மக்கள் பின்பற்றாததால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர இருக்கிறது. அப்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் பண்டிகை காலம் வருவதால் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை செயல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். திருவிழாக்கள் மற்றும் கூட்டங்கள் போன்றவற்றால் கொரோனா மீண்டும் அதிகரிக்கலாம்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தலாம். தடுப்பூசி போடும் பணியையும் அதிகரிக்க வேண்டும். மக்கள் அனைவரும் முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.