சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா நடிப்பது குறித்து இயக்குனர் பி.வாசு விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்த இந்த படத்தில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, நாசர், மாளவிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. பி.வாசு இயக்கும் சந்திரமுகி-2 படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. மேலும் சந்திரமுகி படத்தில் நடிகை ஜோதிகா சந்திரமுகியாக நடித்து மிரட்டியிருந்தார்.
ஆனால் சந்திரமுகி-2 படத்தில் ஜோதிகா நடிக்க மறுத்துவிட்டதால், தற்போது அதற்கான நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே சந்திரமுகி-2 படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த பி.வாசு ‘ஜோதிகா வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அனுஷ்காவிடம் மட்டுமல்ல இன்னும் சில முன்னணி நடிகைகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சந்திரமுகியாக அனுஷ்கா நடிக்கிறாரா? அல்லது வேறு நடிகை நடிக்க இருக்கிறாரா? என்பது குறித்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் முடிவெடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.