நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் வினோத் என்பவர் டோலக்கேட்டில் வரி செலுத்த மறுத்ததின் காரணமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியைடைந்த வேட்பாளர் வினோத். இவர் திருச்சியில் இருந்து காரைக்குடிக்குச் சென்றுகொண்டிந்த பொழுது மாத்தூர் சுங்கச்சாவடியில் வரி செலுத்த மறுத்ததோடு மட்டுமல்லாமல், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தனது அரசியல் பலத்தைக் கூறி மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியுள்ளார். முதலில் சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரை ஒன்றும் சொல்லாமல் மவுனம் காத்துஅவரை விட்டுவிட்டனர். பின் காரைக்குடியில் பணியை முடித்து மீண்டும் திருச்சி நோக்கி வரும் பொழுது, சுங்கச்சாவடி ஊழியர்கள் வழிமறித்து வினோத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் வினோத் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று நாம் தமிழர் கட்சியினர் 100க்கும் மேற்ப்பட்டோர் அதே சுங்கச்சாவடி மையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் சம்பவம் குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் போராட்டத்தைக் கைவிட்டனர். மேலும் தொடர் அழுத்தத்தின் காரணமாக மாத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் வினோத்தை தாக்கியவர்கள் மீது FIR பதிவு செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மொத்தம் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ், சந்துரு, ஆனந்த், குணா என்ற நான்கு நபர்களை தற்பொழுது காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.