மேற்கு வங்கத்தில் பாஜகவினரே தங்களது வீடுகளில் தாக்குதலை நடத்திக் கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதை போன்று நாடகம் ஆடுவதாக முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜான்கிபூர், சாம்ராட்கான் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு வருகிற 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவினர் தங்களது சொந்த வீடுகளில் அவர்களே வெடிகுண்டு வைத்து கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது பழிபோடுவதாக குற்றம் சாட்டினார். பாஜகவினரை தொடுவதையே திரிணாமுல் காங்கிரஸினர் பாவமாக கருதி வருவதாக குறிப்பிட்டார். மேலும் அவர் முதலமைச்சராக தொடர வேண்டுமென்று விரும்பினால் தனக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.