பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் மற்றும் நிதியுதவி கொடுப்பது பாகிஸ்தான் அரசின் கொள்கையாக இருப்பதை உலக நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுச்சபை 76-ஆவது கூட்டத்தில் பேசிய இந்திய முதன்மைச் செயலர் சினேகா தூபே இந்தியாவின் உரிமை என்ற அடிப்படையில் காஷ்மீர் தொடர்பான பாக்கிஸ்தானின் கருத்துகளுக்கு பதில் கொடுத்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது பாகிஸ்தானில் பிரதமர் உலக அரங்கில் பொய்யான நிகழ்வுகளை தூண்டி மன்றத்தின் பெயரை கெடுக்கும் நோக்கில் முயற்சி செய்கிறார். இதில் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் எப்போதுமே பிரிக்க இயலாத பகுதியாக இருப்பதாக சினேகா தூபே கூறியுள்ளார். ஆகவே பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் உடனடியாக வெளியேற்றுமாறு அவர் கேட்டுக் கொள்கிறார்.
இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தும் செயலில் பாகிஸ்தான் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் மற்றும் நிதி உதவி கொடுப்பதும் பாகிஸ்தான் அரசின் கொள்கையாக இருப்பதை உலகநாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சினேகா தூபே கூறியுள்ளார். பாகிஸ்தான் தங்கள் அண்டை நாடுகளுக்கு மட்டும் தீங்கு விளைவிக்கும் என்ற நம்பிக்கையில் பயங்கரவாதிகளை அவர்கள் கொல்லைப்புறத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் இந்தியா மட்டுமல்ல அவர்களின் கொள்கையால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்கள் நாட்டில் மதவெறியால் நடக்கும் பயங்கரவாத செயல்களை மறைப்பதற்கு முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.