தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களில் 2,512 ரவுடிகளை, காவல்துறையினர் கைது செய்து அதிரடி காட்டியுள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை குறைக்கவும், கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், கடந்த இரண்டு நாட்களாக அதிரடி கைது நடவடிக்கை, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது..
கடந்த இரண்டு நாட்களாக நடந்த சோதனையில் 2,512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள் 934 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக ரவுடிகள் மேல் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள்..
இதில் போலீஸ் தேடுதல் வேட்டையில் பிடிபட்ட சிறு சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 1,927 பேரிடம் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து விடுவித்துள்ளார்கள்.. மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 733 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள ரவுடிகளின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இவர்களுக்கு உடந்தையாக யாரும் இருக்கிறார்களா? என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்..
டிஜிபி சைலேந்திரபாபு குற்றச்செயல்களை தடுப்பதற்கான காவல்துறையின் அதிரடி நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.. அதனடிப்படையில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.. இந்த போலீசாரின் தேடுதல் வேட்டை அறிந்து பெரும்பாலான ரவுடிகள் கேரளா, ஆந்திர மாநிலங்களுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் தேடுதல் வேட்டையில் 560 ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில், 2-வது நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து – 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல். pic.twitter.com/LoLDvXm6qe
— Thoothukudi District Police (@TUTICORINPOLICE) September 24, 2021