9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் மருதையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு கல்பனா சூர்யா என்ற 9-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தங்களது வீட்டில் டிவி பார்ப்பதற்காக டி.டி.எச். ரீசார்ஜ் செய்யுமாறு தாயாரிடம் கல்பனா கூறியுள்ளார். இதற்கு பத்மாவதி மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின் தாயார் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த கல்பனா சூர்யா திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து வேலை விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த பத்மாவதி தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து பத்மாவதி கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கல்பனா சூர்யாவின் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.