தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தை தமிழக அரசின் ‘பைபர்நெட்’ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 12,525 கிராமங்களுக்கு பாரத் நெட் திட்டத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் இணையதள வசதியை தமிழக அரசு செய்து தர உள்ளது. பாரத் நெட் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குழு கூடி திட்ட செயல்பாடுகள் பற்றிய ஆய்வு நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாரத் நெட் திட்டப் பணிகளை மேற்கொள்ள எந்த துறையிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 50 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இணையதள வசதி ஏற்படுத்தப்படும். பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த மின்சாரம், நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் இணைந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.