வேதாளம் பட தெலுங்கு ரீமேக்கில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வேதாளம். இந்த படம் ரூ.120 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. தற்போது வேதாளம் திரைப்படம் தெலுங்கில் போலா சங்கர் என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இந்நிலையில் போலா ஷங்கர் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் தமன்னா, சிரஞ்சீவி இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.